:::: MENU ::::
  • To create a Happy, Healthy and Humanity

  • Healthy Life

  • Healthy and Wealthy Life

பிராணாயாமத்தின் பொதுவான அளவு 1:4:2. அதாவது, உள் மூச்சு ஒன்று, கும்பகம் நான்கு, வெளி மூச்சு இரண்டு. இப்படி ஒரே ஒரு பிராணாயாமம் தினமும் பழகினாலும் போதும்.
நாடி சுத்தீ
நாடிகள் அழுக்குகளால் அடைப்பட்டு இருந்தால் அவற்றுள் வாயு வடிவப் பிராணன் நுழைய முடியாது. எனவே, நாடிகளைத் தூய்மையாக்கும் முறைகளில் நிர்மானு, சமானு என்ற இரண்டு வகைகள் உண்டு. நிர்மானு என்பது, உடலைத் தூய்மை ஆக்கும் முறைகளில் நாடி சுத்தம் செய்வது. சமானு என்பது வேதமந்திர பீஜ மந்திரத்துடன் மூச்சை இழுத்துவிட்டுச் செய்வது.
செய்முறைகள்:
1. முதலில் கால்களைக் குறுக்காகப் போட்டுப் பத்மாசனத்தில் அமரவும். கண்களை மூடி, புருவ மையத்தில் மனதைப் பதிக்கவேண்டும். வலது கையின் பெருவிரலையும், கடை மூன்று விரல்களையும் பிரித்துக்கொண்டு மூக்கைப் பிடியுங்கள். வலது பெருவிரலால் மூக்கின் வலதுபக்கத் துளையை அடைத்துக்கொள்ளவும். இடது மூக்குத் துளை வழியே முடிந்தமட்டும் மூச்சை ஒரே சீராக ஓசையின்றி உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்குத் துளை மூலம் மூச்சை மெள்ள, சீராகத் தொடர்ந்து வெளியே விடுங்கள். மீண்டும் மீண்டும் 12 முறை இப்படிச் செய்யவும். இது ஒரு சுற்று.
பிறகு, வலது மூக்கைத் திறந்து மற்ற மூன்று விரல்களால் இடது மூக்கை அடையுங்கள். பெருவிரலை எடுத்து மூக்கின் வலது பக்கமாக முடிந்த அளவு மூச்சை மெள்ள உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்கு மூலம் மூச்சைச் சீராக வெளியே விடுங்கள். இதையும் 12 முறை செய்தால் ஒரு சுற்று. மூச்சை இழுக்கும்போதும் விடும் போதும் ‘ஓம்’ அல்லது ஏதாவது மந்திரத்தை ஜபிக்கலாம்.
முதல் வாரம், ஒரு சுற்று இரு மூக்கிலும் சேர்த்துச் செய்யுங்கள். இரண்டாம் வாரத்தில் இரண்டு சுற்றும், மூன்றாம் வாரத்தில் மூன்று சுற்றும் செய்யுங்கள். ஒரு சுற்றுச் செய்தவுடன் சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இந்த ஓய்வில் சாதாரணமாகவே சுவாசிக்கலாம். இதுவே ஓய்வுதான்.
இந்தப் பயிற்சியில் உள்ளே மூச்சை நிறுத்தும் கும்பகம் இல்லை. உங்கள் திறமைக்கேற்ப அதிகச் சுற்றுகளைப் பழகலாம்.
பலன்கள்: இது மூச்சை ஒழுங்குப்படுத்தும். இதனால் மூச்சளவு ஒரே சீராகி, நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும். உடலில் பலமும் கூடும்.
2. இரு மூக்குத் துளைகளின் மூலமும் முடிந்த அளவுக்கு மூச்சை ஓசையின்றி ஒரே சீராக மெள்ள இழுத்து, நுரையீரல்களில் நிரப்பிக்கொள்ளவும். உடனே, அதேபோல இரண்டு மூக்குத் துளைகள் மூலமும் மூச்சை வெளியே விடவும். இதை 12 முறைகள் செய்ய ஒரு சுற்றாகும். நேரம், திறமைக்கு ஏற்ப அதிகச் சுற்றுகள் செய்யலாம். இதிலும் கும்பகம் இல்லை.
3, உங்களுக்குத் தெரிந்த ஆசனம் எதுவோ அதுபோல் அமருங்கள். மூக்கின் வலதுபக்கத் துளையை வலப் பெருவிரலால் மூடி, மூக்கின் இடதுபக்கத் துளையில் சுவாசத்தை இழுங்கள். இடது துளையை மூடியவாறு வலது மூக்கு வழியாக மெள்ள இழுத்த காற்றை வெளியே விடுங்கள். வலமூக்கு வழியே முடிந்த அளவு காற்றை உள்ளிழுங்கள். இடமூக்கைத் திறந்து அதன் மூலம் உள்ளே இழுத்த காற்றை வெளியே விடுங்கள். இதிலும் கும்பகம் இல்லை. 12 முறை இதைச் செய்யலாம். இது, ஒரு சுற்றுக் கணக்கு. இதில் மூக்கு மாற்றிச் செய்வதே சிறப்பு.
4. நாற்காலி, சோபாவில் வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள். இரு மூக்குத் துளைகள் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மூச்சை உள்ளே இழுங்கள். முடிந்தவரை உள்ளே நிறுத்திக்கொள்ளுங்கள். பிறகு வெளியே சீராக மெள்ள நியமப்படி வெளியே விடுங்கள். இது எளிய கும்பகமாகும். உள்ளிழுத்தல், நிறுத்தல், வெளியேவிடலில் குறிப்பிட்ட விகிதம் எதுவும் அளவாக இல்லை. ஆனால், நன்கு இழுப்பது, முழுவதும் வெளிவிடுவதும், சுகமாக இருக்கும் வரை மட்டுமே அடக்குதலும் உண்டு.
பலன்கள்: ரத்த ஓட்டம் சீராகும். களைப்பு அகலும். உடல் உறுப்புகளிடையே ஒழுங்கு, ஒருங்கிணைப்பு உண்டாகும். மனம் ஒருநிலைப்படும். கோபம், தீய சிந்தனை அகலும். மன உறுத்தல், உளைச்சல் நீங்கும். படிப்பவர்களுக்கு நல்ல ஞாபகசக்தி தங்கும். மன ஆற்றல் அதிகரிக்க இந்தப் பயிற்சியைப் பழகலாம். சோர்வு இருக்காது. 30 வருட ஆஸ்துமா பிரச்னைகூட தீரும். ஒரு முறை செய்துவிட்டாலே அடிக்கடி செய்யத் தூண்டும் பயிற்சி இது.
www.rumiherbals.online 
www.sigaramyoga.com
A call-to-action text Contact us